search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள தேவசம் போர்டு"

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சாமி கோவிலில் ரகசிய நிலவறைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிலவறைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் திறந்து பார்த்த போது விலைமதிப்பற்ற ஏராளமான தங்கம், வைரம், வைடூரிகம் போன்ற பழமையான நகைகள் அடங்கிய பொக்கி‌ஷம் இருப்பது தெரிய வந்தது.

    இங்குள்ள பெரிய நிலவறையான ‘பி’ நிலவறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த நிலவறையில் மேலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த நிலவறையை திறக்க முடியும்.

    பத்மநாபசாமி கோவிலில் பொக்கி‌ஷம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ளது. கமாண்டோ பாதுகாப்பு படையினரும் அந்த கோவிலின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பத்மநாபசாமி கோவிலில் கிடைத்த பொக்கி‌ஷங்களை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக இவற்றை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கேரள சட்டசபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது:-

    பத்மநாபசாமி கோவிலிலில் உள்ள பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தின் அனுமதியுடன் மட்டுமே இதை செய்ய முடியும். அரசு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பத்மநாபசாமி கோவிலின் அருகிலேயே அமையுமாறு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலகில் பல நாடுகளில் இது போன்ற அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகமும் அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பது தொடர்பாக ஏற்கனவே திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கருத்து தெரிவித்து இருந்தனர். அப்போது பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு பதில் அந்த அபூர்வ நகைகளை 3டி புகைப்படங்களாக எடுத்து அதை அருங்காட்சியகத்தில் வைப்பதே பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி இருந்தனர்.

    ×